உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்

சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 45 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவரும், மூத்த ஒளிப்பதிவாளருமான பாபு, 88, வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். நாளை அவரின் இறுதி சடங்கு நடக்கிறது

ஒளிப்பதிவாளர் கேஎஸ் பிரசாத்திடம் உதவியாளராக பணியாற்றிய பாபு அன்றைக்கு முன்னணி நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் படங்களின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சில படங்களில் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய வர முடியாத இடங்களில் பாபுவே ஒளிப்பதிவு செய்துள்ளார்.



தமிழ் மற்றும் ஹிந்தி மொழி உள்பட ரஜினியின் 27 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றியுள்ளார். அதில், ‛‛பிரியா, முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, கழுகு, போக்கிரி ராஜா'' உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை. கமல்ஹாசனுடன் ‛‛சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே'' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2001ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‛தாலி காத்த காலி அம்மன்' தான் இவரின் கடைசி திரைப்படம்.

சென்னை, அபிராமிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு, திங்கட்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு விஷ்வநாத், ஶ்ரீதர் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஶ்ரீதர் அமெரிக்காவில் இருந்து சென்னை வருவதால் நாளை(அக்., 12) நண்பகல் 12 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



இவர் மறைவு குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறுகையில், ஒளிப்பதிவாளர் பாபுவை என் கண்கள் என்பேன். என்னுடன் 45 படங்களில் பணியாற்றியவர். பல ஆண்டுகளாக அவருடன் இணைந்து வேலை செய்து இருக்கிறேன். நான் இயக்கிய பல வெற்றி படங்களின் ஒளிப்பதிவாளர் அவர்தான். குறிப்பாக சகலகலா வல்லவன் படத்தை கமர்ஷியலாக ஒளிப்பதிவு செய்தார். ஹேப்பி நியூ இயர் பாடல் இன்றும் பேசப்படுகிறது. ரஜினியின் முரட்டுகாளை சண்டை காட்சி, பாடல் அவ்வளவு பிரபலம். என்னுடன் இணைந்து நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீராகவேந்திரா, ஆறில் இருந்து அறுபதுவரை படங்களும் அவர் சினிமா வாழ்வில் முக்கியமானவை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2025-10-11 13:15:50

Very talented காமிராமேன். Thoongathe thambi Thoongathe படத்தில் வரும் வானம் mela கிழே பூமி மற்றும் பாயும் புலி மழையில் ஒரு சண்டை காட்சி டெக்னாலஜி பெருசா இல்லாத அந்த காலத்துல அழகாக பதிவு panni இருப்பார்ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்