ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு
நெட்பிலிக்ஸ் தளத்தில் 'டெஸ்ட்', 'தி கேம்: யு நெவர் பிளே அலோன்' என்ற தமிழ் வெப் தொடர்கள் சமீபத்தில் வெளியானது. தொடர்ந்து பல நேரடி ஓடிடி படங்கள், வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்புகளை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான 'ஸ்டீபன்' படத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறோம். மிதுன் இயக்கும் இந்தப் படத்தில் கோமதி ஷங்கர் நடிக்கிறார். ஒரு கேஸில் கில்லரை மதிப்பிடும் மனநல மருத்துவரை சுற்றி இந்தக் கதை நகரும். இது எப்படி அந்த மனநல மருத்துவருக்கே எதிராக திரும்பும் என்பதையும் இந்தக் கதை சொல்லும்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், நவீன காதல் குறித்த வித்தியாசமான கோணத்தை வழங்குகிறது 'காதல்' என்ற தமிழ் சீரிஸ். எதிர்பாராத வழிகளில் இருவரை நெருக்கமாகக் கொண்டுவரும் தருணத்தில் ஏற்படும் சவால்களை இந்தத் தொடர் பேசுகிறது. நகைச்சுவை மற்றும் இன்றைய காதலையும் தொடர் பேச இருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கலாசாரக் கதையைக் கொண்டு வருகிறது 'மேட் இன் கொரியா'. ரா கார்த்திக் இயக்கிய இந்தக் கதையில் 'ஸ்க்விட் கேம்' புகழ் பார்க் ஹை-ஜினுடன் பிரியங்கா மோகன் நடிக்கிறார். துரோகத்தால் கொரியாவுக்கான கனவுப் பயணம் தடம் புரண்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. எதிர்பாராத நட்புகள் மற்றும் கடினமான பாடங்கள் மூலம், அவள் நம்பிக்கையையும் தன்னையும் கண்டுபிடிக்கிறாள்.
இயக்குநர் சாருகேஷ் சேகரின் தமிழ்த் தொடர் 'லெகஸி'. இதில் மாதவன், நிமிஷா சஜயன், கௌதம் கார்த்திக், குல்ஷன் தேவையா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த குடும்ப கேங்ஸ்டர் நாடகம் வாரிசு உரிமையை மையமாகக் கொண்டு நகர்கிறது.
இதுதவிர 'சூப்பர் சுப்பு' என்கிற தெலுங்கு வெப் தொடர், 'தக்ஷகுடு' என்ற திரைப்படமும் வெளியாகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.