பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகியாகவும், நடிகையாகவும் விளங்கிய பாலசரஸ்வதி தேவி காலமானார். ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் 97 வயதானதால் முதுமை நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
திருப்பதி அருகிலுள்ள வெங்கடகிரியில் பிறந்த பாலசரஸ்வதி தேவி, 1936ம் ஆண்டு வெளிவந்த சி.புல்லையா இயக்கிய 'சதி அனசுயா' என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பக்த குசேலா' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர், பாலயோகி, திருநீலகண்டர், துக்காராம், பில்ஹனா உள்பட சில படங்களில் நடித்தார்.
பின்னர் தெலுங்கு சினிமாவின் முதல் பின்னணி பாடகி ஆனார். தமிழில் 'மங்கையர் திலகம்' படத்தில் இடம்பெறும் 'நீலவண்ணக் கண்ணா வாடா', எம்.ஜி.ஆரின் 'ராஜராஜன்' படத்தில் 'கலையாத ஆசை கனவே', 'மகாதேவி'யில் வரும் 'சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே', சிவாஜியின் 'உத்தம புத்திரன்' படத்தில், 'முத்தே பவளமே' என்பது உள்பட தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
ஆர்.பாலசரஸ்வதி தேவி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.