பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான பாகுபலி முதல் பாகம் மற்றும் 2017ல் வெளியான பாகுபலி இரண்டாவது பாகம் இரண்டுமே மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. சொல்லப்போனால் இப்போது மிகப்பெரிய படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதற்கு பாகுபலி படத்தின் வெற்றி தான் உந்துதலாக அமைந்தது. இப்போதும் பாகுபலி படத்திற்கு என ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் தான் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து ஒரே படமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
அந்த வகையில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய இந்த இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து 3 மணி 44 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரே படமாக பாகுபலி ; தி எபிக் என்கிற பெயரில் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு இந்த படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். .
வரும் அக்-31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஐந்தரை மணி நேர படத்தை மூன்றே முக்கால் மணி நேரமாக மாற்றி இருப்பதால் என்ன மாற்றங்களை இதில் செய்திருப்பார்கள் என்று பார்க்கும் ஆவல் இயல்பாகவே ரசிகர்களுக்கு ஏற்படும் என்பதால் நிச்சயம் இந்த பாகுபலி தி எபிக் படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பும் வெற்றியும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.