பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத்
ADDED : 7 minutes ago
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான பவன் கல்யாண், ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வர் ஆனார். அதன் பின்னர் பெரிதளவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இருப்பினும் அவர் ஏற்கனவே நடித்து வந்த ‛ஹரிஹர வீர மல்லு, ஓஜி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஓ.ஜி' படம் வெற்றி பெற்றது.
தற்போது ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அடுத்தும் படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறாராம். கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக் ஷன்ஸ் நிறுவனம் பவன் கல்யாண் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளனர். இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.