நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு
பூடானில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் விலை உயர்ந்த லேண்ட்ரோவர் காரும் ஒன்று.. ஆனால் இந்த கார்களை தான் முறைப்படி அனைத்து வரிகளையும் செலுத்தி வாங்கியுள்ளதாக துல்கர் சல்மான் கூறியதுடன் அந்த கார்களை வழக்கை காரணம் காட்டி பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அவை சில காலத்திலேயே பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக சீர் கெட்டுவிடும் எனவே அந்த கார்களை தன்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சுங்கத்துறை அதிகாரிகள் துல்கர் சல்மானின் லேண்ட் ரோவர் காரை அவரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். அதே சமயம் இந்த காரை முறைப்படி அனுமதி இல்லாமல் எங்கேயும் கொண்டு செல்லக்கூடாது.. விசாரணையின் போது தேவைப்பட்ட நேரத்தில் வாகனத்தை அதிகாரிகள் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் இந்த காரை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.