சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு
மலையாளத்தில் இஸ்க், ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் நடிகர் ஷேன் நிகம். தமிழில் மெட்ராஸ்காரன், சமீபத்தில் வெளியான பல்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக தயாராக இருக்கும் படம் ஹால். இந்த படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் படம் பார்த்த அதிகாரிகள் அந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றில் மாட்டிறைச்சி பிரியாணி சம்பந்தப்பட்ட காட்சி மற்றும் வசனங்களை நீக்கும்படி கூறி சான்றிதழ் தர தாமதப்படுத்தி உள்ளனர்.
அந்த காட்சிகளை நீக்க உடன்பாடு இல்லாத ஹால் படக்குழுவினர் இது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்கள். இந்த நிலையில் நீதிமன்றத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவுன்சில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு இதில் எதிர்க்கத் தக்க கருத்துக்கள் எதுவும் இல்லை என்று கூறியதுடன் தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற நீதிபதியோ இல்லை அவரால் நியமிக்கப்படும் அதிகாரப்பூர்வ நபரோ இந்த படத்தை பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜி. அருண் இந்த படத்தை பார்க்க இருப்பதாகவும் வரும் செவ்வாய்க்கிழமை அதற்கான தேதி குறித்து அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த பட திரையிடலின் போது சென்சார் போர்டை சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் கவுன்சிலை சேர்ந்த ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.