பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள்
தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்ற பண்டிகைப் பாடல்கள் என பட்டியலிடச் சொன்னால் அதில் முக்கிய இடம் பிடிக்கும் பண்டிகை “தீபாவளி” ஆகும். நாம் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடி மகிழ்ந்திருந்தாலும், “தீபாவளி” பண்டிகைக்கு என ஒரு தனி மகத்துவம் எப்போதும் இருப்பதுண்டு. அதிலும் குறிப்பாக சிறு வயதில் நாம் கொண்டாடி மகிழ்ந்த தீபாவளிகளின் நினைவுகள் என்பது, இழந்த இளமையைக் கூட எளிதில் மீட்டித் தரும் வல்லமை கொண்டது.
வீட்டில் அம்மா பலகாரம் சுடுவது, அப்பாவுடன் கடை வீதிக்குச் சென்று பட்டாசுகள் வாங்குவது, புத்தாடை அணிவது, வாங்கி வந்த பட்டாசுகளை வெடித்து வானலாவ மகிழ்ச்சியுறுவது என திரும்பும் திசை எங்கும் சந்தோஷம் குடிகொண்டிருக்க, தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் என்னென்ன? எந்த நடிகரின் திரைப்படத்தை முதலில்; பார்ப்பது என்ற ஆர்வமும், ஆரவாரமும் மறு புறம் சூழ்ந்து, மகிழ்ச்சியின் உச்சத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும்.
அப்படிப்பட்ட “தீபாவளி” திருநாளில், திரைப்படங்களின் பங்கு என்பது அளவிட முடியாத ஆனந்தத்தை நமக்கு மேலும் அள்ளி வழங்கும் ஒரு அற்புதமான சாதனமாக இன்று வரை இருந்தும் வருகின்றது. அந்த வகையில் நாம் பார்த்து, ரசித்து, மகிழ்ந்த திரைப்படங்களில் “தீபாவளி” பண்டிகையை சிறப்பிக்கும் வண்ணம் ஏதாவது ஒரு பாடல் இடம் பெற்றிருந்தால் அது நம் சிந்தையை விட்டு என்றும் அகலாத பாடலாகவே நிலைத்து விடும். அப்படி திரைப்படங்களில் இடம் பெற்ற மறக்க இயலாத சில தீபாவளிப் பாடல்களைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பினைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
1950ம் ஆண்டு நடிகர் எம் என் நம்பியார் நாயகனாக நடித்து, வெளிவந்த “திகம்பர சாமியார்” என்ற படத்தில் இடம் பெற்ற “ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டபார்.. டபார்…” என்ற பாடலையே இந்தப் பட்டியலில் முதல் பாடலாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இன்று அறுபது, எழுபது வயதினைக் கடந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு பரிச்சயமான பாடல் என்றே சொல்லலாம். ஜி ராமனாதன் இசையமைப்பில் டி ஆர் கஜலக்ஷ்மி மற்றும் வி டி ராஜகோபாலன் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடலில் ஊசிப்பட்டாசில் ஆரம்பித்து, யானை வெடி, ஆட்டம் பாம், பூவானம், பாம்பு மத்தாப்பு, என ராக்கெட் வரை பட்டாசு வகைகளைப் பட்டியலிட்டு பாடியிருப்பார் பாடலை எழுதிய கவிஞர்.
வானொலி மட்டுமே மக்களின் பொழுது போக்கு சாதனமாக இருந்து வந்த 60 மற்றும் 70 காலகட்டங்களிலும், அதன்பின் தொலைக்காட்சி அறிமுகமான 80 காலகட்டங்களிலும் “தீபாவளி” நாளன்று இந்தப் பாடல் இடம் பெறாத வானொலியும் இல்லை. தொலைக்காட்சிப் பெட்டியும் இல்லை எனும் அளவிற்கு ஒரு சிறப்பு மிக்க தீபாவளிப் பாடலக இந்தப் பாடலைச் சொல்லலாம்.
இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் 1958ம் ஆண்டு ஜெமினிகணேசன் மற்றும் சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த “கல்யாண பரிசு” திரைப்படத்தில் இடம் பெற்ற “உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உள்ளாசம் பொங்கும் இன்ப தீபாவளி” என்ற அந்தப் பாடல், பொதுவுடமைக் கருத்துக்களையும், கம்யூனிச சித்தாந்தங்களையும் பெருவாரியாக தனது பாடல்களில் இடம் பெறச் செய்து வந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடல்களின் வரிசையில் வித்தியாசமாக வந்த ஒரு தனிச் சிறப்புக்குரிய பாடல் இந்தப் பாடல்.
“சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு, தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு, முத்திரைப் பசும் பொன்னே ஏனிந்த சிரிப்பு” என தீபாவளி நாளன்று நாயகி தனது சகோதரியின் மகனை வைத்துப் பாடுவது போல் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் இந்தப் பாடலில், மழலையின் சிரிப்பை சிதறும் அழகிய மத்தாப்புடனும், தீயின்றி வெடிக்கும் கேப்புடனும் ஒப்பிட்டு, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது இயல்பிலிருந்து மாறி, மிக அற்புதமாக எழுதியிருப்பார். இன்றுவரை, தீபாவளி நாளன்று இந்தப் பாடலை ஒலிபரப்புச் செய்யாத வானொலியும் இல்லை. தொலைக்காட்சியும் இல்லை என்பதே உண்மை.
அடுத்து 1984ம் ஆண்டு நடிகை நதியாவின் அறிமுகத் தமிழ் திரைப்படமான “பூவே பூச்சூடவா” திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த “பட்டாசுச் சுட்டுச் சுட்டு போடட்டுமா? மத்தாப்புச் சேலை கட்டி ஆடட்டுமா? தீவிளிக்கு தீவிளி எண்ணெய் தேச்சு குளி” என்ற பாடல். ஒவ்வொரு தீபாவளியின் போதும், இந்தப் பாடல் இடம் பெறாத வானொலியும் இல்லை. தொலைக்காட்சியும் இல்லை எனும் அளவிற்கு 1980களில் ஒவ்வொரு வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டியின் வாயிலாக தீபாவளியை வண்ணமயமான தீபாவளியாக மாற்றிக் காட்டிய பெருமை இந்தப் பாடலுக்கு என்றும் உண்டு.
இந்த வரிசையில் இடம் பெற இருக்கும் இந்தப் பாடலுக்கு மற்ற பாடல்களுக்கெல்லாம் இல்லா ஒரு தனிச்சிறப்பு உண்டு. பாடலின் காட்சி அமைப்பும், பாடலுக்கான சூழலும் வேறு மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு தீபாவளியின் போதும் இந்தப் பாடல் முதல் பாடலாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தனர் என்றே சொல்லலாம்.
கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளில், கே ஜமுனா ராணி மற்றும் எம் எஸ் ராஜேஸ்வரி ஆகியோர் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் பாடிய “நான் சிரித்தால் தீபாவளி” என்ற “நாயகன்” படப்பாடல்தான் அது. இவை தவிர, 1982ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த “புதுக்கவிதை” திரைப்படத்தில் இடம் பெற்ற “வா வா வசந்தமே”, 1971ல் வெளிவந்த “மூன்று தெய்வங்கள்” திரைப்படத்தில் இடம் பெற்ற “தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம், வைரங்கள் போலே ஒளி விடட்டும்”, 2001ல் வெளிவந்த “ரமணா” திரைப்படத்தின் “வானம் அதிரவே வானம் வெடிக்கலாம்” என்று திரையில் சிதறி வெடித்த வண்ணமயமான தீபாவளிப் பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி ஏராளமான மறக்க முடியாத தீபாவளிப் பாடல்கள் நம் சிந்தையில் தெறித்துச் சிதறும் வண்ண மத்தாப்புகளாக இருந்து, ஒவ்வொரு தீபாவளித் திருநாளிலும் இசை விருந்தளித்து நம்மை இன்புறச் செய்கின்றது.