திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால்
மலையாளத்தில் 'ஜனப்பிரிய நாயகன்' என்கிற பெயருடன் குடும்பப் பாங்கான படங்களில் நடித்து வருபவர் நடிகர் திலீப். ஆனால் சமீப காலமாக அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது கமர்சியல் ஆக்சன் படமாக அவர் நடித்து வரும் ப ப ப (பயம் பக்தி பகுமானம்) திரைப்படம் உருவாகி வருகிறது. மோகன்லால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து திலீப் கடந்த 2002ல் நடித்த கல்யாணராமன் திரைப்படம் 4கே டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தை இயக்குனர் ஷபி இயக்கியிருந்தார். நடிகர் லால் இந்த படத்தை அப்போது தனது லால் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த ரீ ரிலீஸிலும் நடிகர் லால் இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார். படம் குறித்த ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படாவிட்டாலும் இந்த படத்தின் ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பை நடிகர் திலீப் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு போஸ்டர் உடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.