உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம்

தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகமான சாதியப் படங்கள் வருவதாக ஒரு சர்ச்சை உள்ளது. குறிப்பாக பா ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன், மோகன் ஜி ஆகியோர் சாதியை மையமாக வைத்து படங்களை எடுப்பதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'பைசன்'. அப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரமும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரம் தான். கபடி வீரனாக ஆசைப்படும் அந்தக் கதாநாயகனுக்கு சாதி வித்தியாசம் பார்க்காமல் வேறு சாதியைச் சேர்ந்த சிலர் கை கொடுத்து தூக்கி விடுவதாகத்தான் கதை அமைந்திருந்தது. இந்தப் படத்தில் மற்ற சாதியினரின் உதவும் குணத்தையும் காட்டியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

ஆனால், மற்ற மொழிகளில் உள்ளவர்களுக்கு அதைப் புரிந்து கொள்வதில் சிரமம் உண்டு. 'பைசன்' படம் இந்த வாரம் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகிறது. அதன் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் துருவ்விடம், தமிழ் இயக்குனர்களின் சாதியப் படம் குறித்த கேள்வியை ஒருவர் எழுப்பினார்.

அதற்கு துருவ் விக்ரம், ““மாரி செல்வராஜ் தனது சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு சினிமா உருவாக்குகிறார். ஒவ்வொரு இயக்குனருக்கும் தங்கள் கலையை அவர்கள் விரும்பிய வழியில் உருவாக்கும் உரிமை உண்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளில் இதுபோன்ற சமூக சூழல் இருக்கும்போது, அது (சாதியவாதம் பற்றிய படங்கள்) இன்னும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அத்தகைய பிரச்னைகளை விவாதிப்பது முக்கியம், அதோடு இன்னும் நடக்கும் அந்த விஷயங்களுக்கு வெளிச்சம் போட வேண்டும். சினிமா அதைப் பற்றி மக்களை கல்வியூட்டுவதற்கு ஒரு நல்ல ஊடகம் என்று நான் உணர்கிறேன்” என பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !