சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, உள்ளிட்ட நடிப்பில் கடந்தவாரம் வெளியாகி உள்ள படம் ‛பைசன்'. கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி, கொஞ்சம் கற்பனை கலந்து இந்த படத்தை எடுத்து இருந்தார் மாரி. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ரஜினி சில ஆண்டுகளாகவே இளம் தலைமுறையினர் படங்களை பார்த்துவிட்டு பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் இப்போது பைசன் படத்தையும் பாராட்டி உள்ளார்.
இதுதொடர்பாக மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛ 'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ' - சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.