உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது

பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 'மனோகரா'. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய 'மனோகரா' என்ற நாடகம் அதே பெயரில் சினிமா ஆனது. எல்.வி.பிரசாத் இயக்கம், சிவாஜி, கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி நடிப்பு, கருணாநிதியின் அனல் தெறிக்கும் வசனங்களால் இப்போதும் பேசப்படுகிற படம்.

ஆனால் இந்த படத்தின் மூலக் கதை ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியருடையது என்பது பலரும் அறியாத ஒன்று. ஆங்கில நாடங்களை விரும்பி படித்து வந்த பம்மல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியரின் “ஹேம்லெட்” நாடகத்தை படித்தார். அந்த நாடகத்தால் ஈர்க்கப்பட்ட அவர் அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து 'அமலாதித்யன்' என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகம் ஆங்கில நாடகம் போன்றே அமைந்ததால் அது வெற்றி பெறவில்லை. பின்னர் இதே நாடகத்தை தமிழ்நாட்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றி, அதற்கேற்ப எளிய வசனங்களை எழுதிய நாடகம்தான் 'மனோகரா'. இது நாடகமாக நல்ல வரவேற்பை பெற்றது, சம்பந்த முதலியாரே மனோகரனாக நடித்தார்.

அதன் பின், நடிகர் கே.ஆர்.ராமசாமி, மனோகரா நாடகத்தை தனது நாடக குழுவின் சார்பில் நடத்தி வந்தார். அதில் அவரே கதாநாயகன் மனோகரனாக நடித்திருந்தார். ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த மேடை நாடகத்தில், மனோகரனின் தாய் ராணியாக சினிமாவில் கண்ணாம்பா நடித்த வேடத்தில் சிவாஜி பெண் வேடமிட்டு நடித்தார்.

இன்னொரு தகவல் என்னவென்றால் சிவாஜியின் முதல் படமே 'மனோகரா' தான் அமைந்திருக்க வேண்டும். 'பராசக்தி'க்கு முன்பே கருணாநிதி மனோகரா வசனத்தை எழுதிவிட்டு சிவாஜியை நடிக்க வைப்பது என்று முடிவு செய்திருந்தார். ஆனால் மனோகரா சரித்திர படம் என்பதால் அதற்குரிய தயாரிப்பாளர் கிடைக்காததால் பராசக்தி படம் தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !