கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன்
இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும், ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடையவர் மறைந்த கவிஞர் வாலி. 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கருணாநிதி, எம்ஜிஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு, தனது 81வது வயதில் காலமானார்.
இந்நிலையில், வாலி பதிப்பகம் சார்பில் அவரின் 94 வது பிறந்தநாள் விழா, நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை சென்னையில் கொண்டாடப்படுகிறது. அதில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை வழங்கி வாலி குறித்து பேச உள்ளார் இயக்குனர் கே. பாக்யராஜ்.
இந்த விழாவில் திரைப்பட உதவி இயக்குனர் கவிஞர் பதுமை செல்வன் எழுதிய வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள் எனும் நூலை திரைப்பட இயக்குனர் லிங்குசாமி வெளியிடுகிறார். மேலும் விழாவில் வாலி பாடல்கள் அடங்கிய திரைப்பட இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.