மக்களின் கருத்தை அறிய அமெரிக்காவில் 'ராமாயணம்' திரையீடு
ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படம் 'ராமாயணம்'. இரண்டு பாகமாக உருவாகும் இந்த படத்தை நிதேஷ் திவாரி இயக்குகிறார். ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ராவணனாக யஷ்ஷும் நடித்துள்ளனர். அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பலர் நடித்திருக்கின்றனர்.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் சார்பில் நமித் மல்ஹோத்ராவும், யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கும் 2-வது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் நிறைவு பெறாத, அதாவது பின்னணி இசை, எடிட்டிங், கலர் கரெக்ஷன் பணிகள் முடியாத நிலையில் 'பர்ஸ்ட் கட்டிங்' எனப்படும் பிரதியை தயாரிப்பு நிறுவனம் பொதுமக்களுக்கு போட்டு காட்டி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சினிமார்க் பிளேயா விஸ்டா திரையரங்கில் திரையிடப்பட்ட இதனை 18 வயது முதல் 60 வயது வரையிலான இந்திய ரசிகர்கள் படத்தை பார்த்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.இந்த கருத்துகளின் அடிப்படையில் படத்தை முடிக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஏவிஎம் செட்டியார் தனது ஒவ்வொரு படத்தையும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரை வரவழைத்து அவர்களுக்கு திரையிட்டு காட்டி அவர்களின் கருத்தை கேட்டுத்தான் படத்தின் இறுதி பிரதியை முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.