சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கும் கவுதம்
பாலிவுட்டில் இருந்து நடிகைகளை மட்டுமல்லாது வில்லன்களையும் இறக்குமதி செய்வது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் தற்போது வருகிறார் அபர்ஷக்தி குரானா. நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் சகோதரனான இவர் இப்போது பாலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் இளம் வில்லன்.
கவுதம் கார்த்திக் நடிக்கும் ரூட் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படம் இன்றைய காலகட்டம், 1940 காலகட்டங்களில் நடக்கும் கதையை கொண்டது. இதில் அபர்ஷக்தி இரண்டு காலகட்டங்களிலும் வரும் கேரக்டரில் நடிக்கிறார். கவுதம் கார்த்திக் சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கிறார். அவரது ஜோடியாக வரும் பவ்யா தாரிக்கா ஆசிரியையாக நடிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் சூர்ய பிரதாப் கூறும்போது “இரண்டு காலகட்டங்களில் நகரும் கதை இது. தற்காலத்தில் தொடங்கி, முக்கியமான பகுதியாக 1940 காலகட்டத்தின் ப்ளாஷ்பேக் விஷயங்களும் இருக்கிறது. கவுதம் இதில் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக நடித்திருக்கிறார். அதனால் அவர் சீருடையில் வரமாட்டார், பொதுவான சிவில் உடைகளிலேயே படம் முழுக்க வருவார்.
தொடர்ந்து ஒரே மாதிரியான கொலைகள் நடக்கிறது. அது சைக்கோ கொலைகாரன் செய்யும் செயல் என்று ஹீரோவுக்குத் தெரிய வருகிறது. ஆனால் வில்லனோ, எந்தவிதமான வெளி அடையாளமும் இல்லாமல், யாராலும் பிடிக்கவே முடியாத ஒருத்தராக இருக்கிறார். ஹீரோ அந்த வில்லனைத் தேடிப் போகும்போது நடக்கும் அதிரடியான சம்பவங்கள், வில்லனுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள், ஹீரோவுக்கு நேரும் சவால்கள் என விறுவிறுப்பான ஒரு த்ரில்லருக்கான விஷயங்கள் அத்தனையையும் இந்த படத்தில் இருக்கிறது” என்றார்.