யஷ், பிரபாஸ் பாணியில் களமிறங்கும் சர்வானந்த்
தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஷர்வானந்த். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். சாக்லெட் ஹீரோவாக நடித்து வந்த ஷர்வானந்த் சமீபகாலமாக ஆக்ஷன் படங்களிலும் நடித்து வருகிறார். இதன் அடுத்த கட்டமாக யஷ், பிரபாஸ் பாணியில் 'போகி' என்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார்.
இந்த படத்தை சம்பத் நந்தி இயக்குகிறார். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் சார்பில் கே.கே.ராதா மோகன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். வருகிற ஆகஸ்ட் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “1960களின் பிற்பகுதியில் வடக்கு தெலுங்கானா , மகாராஷ்டிரா எல்லையில் அமைக்கப்பட்ட ஒரு ஆற்றல்மிக்க காலகட்ட பின்னணியில் படம் உருவாகி வருகிறது. தற்போது ஐதராபாத்தில் மிகப்பெரிய அரங்கில் அதிரடி ஆக் ஷன் காட்சிகள் படமாகி வருகிறது. இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இரண்டு பெரிய அளவிலான அதிரடி அத்தியாயங்களை படமாக்குகிறார். இந்த திரைப்படத்தில் வலிமைமிக்க தொழில்நுட்ப குழுவினர் ஒன்றிணைந்துள்ளனர். பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.
ஆகஸ்ட் 28ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.