தியேட்டர் வசூலில் வெளிப்படை தன்மை : நடப்பு தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கோரிக்கை
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் டி. சிவா, துணைத் தலைவர்கள் எஸ். ஆர். பிரபு, தனஞ்செயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் 'விபிஎப்' கட்டணத்தை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக அவ்வாறு கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
திரையரங்குகள் சொந்தமாகவோ அல்லது வாடகை மூலம் டிஜிட்டல் ப்ரொஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவ வேண்டும். சொந்தமாக டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வைத்திருக்கும் திரையரங்குகள் மட்டுமே வாங்க வேண்டும். விபிஎப் கட்டணம் வாங்க கூடாது என்று அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
தமிழகத்தில் 1150 திரையரங்கம் உள்ளது. அவற்றை ஒருங்கிணைத்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஒரு வெளிப்படைத் தன்மைக் கொண்டு வரப்பட வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு ஒரு சென்ட்ரலைஸ்ட் பாக்ஸ்-ஆபிஸ் கலெக்ஷன் டிராக்கிங் சிஸ்டம் வரவேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் அந்தந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஷேர் தர வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனம் என மூவருக்கும் சரிசமமாக ஷேர் தரப்பட வேண்டும்.
தமிழகத்தில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் மூலம் திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கவும், சென்னை நகரில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி, ஒரு கோரிக்கையை சில வருடங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. அதற்காக, சென்னை நகரில் எந்தெந்த தெருக்கள் பகல் நேரத்தில் படப்பிடிப்புக்கு உகந்தது என்று ஆய்வு செய்யப்பட்டு விபரங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அனுமதியை விரைவில் தருமாறு தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இதுபோன்ற பல தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.