படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம்
சினிமாவில் நடிகைகளுக்கு நிறம் முக்கியம். அதையும் தாண்டி ஜெயித்த பல நடிகைள் உள்ளனர். அவர்களில் தற்போதைய உதாரணம் செம்மலர் அன்னம். 'அம்மணி', 'மகளிர் மட்டும்', 'சில்லுக் கருப்பட்டி', 'குரங்கு பொம்மை', 'யாத்திசை', 'மாவீரன்', உள்ளிட்ட படங்களில் நடித்தவர், 'மயிலா' படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
படம் குறித்து அவர் கூறியதாவது: நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் இயக்குனராவற்கே சினிமாவிற்கு வந்தேன். அதற்காகவே வீட்டில் பிடிவாதமாக விஸ்காம் படிக்க வேண்டும் என அடம்பிடித்து படித்து முடித்தேன். வாழ்நாளில் ஒரு முழு நீளப் படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். அந்தக் கனவை 'மயிலா' நிறைவேற்றியிருக்கிறாள்.
இந்தப் படத்துக்கு லைவ் டப்பிங். அதனால் நன்கு தமிழ்ப் பேசும், குரல்வளம் உள்ள ஒருவர் வேண்டும் என்பதால் நடிகை மெலோடி டார்கஸ் தேர்வானார். இந்தப் படத்தில் என் மகள் சுடர்கொடியை நடிக்க வைத்துள்ளேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது.
என் மகள் என்பதால், அவளிடம் எப்படி வேண்டுமோ, எப்போது வேண்டுமோ, எத்தனை முறை வேண்டுமோ, அப்படி நடிக்க வைத்துக் கொள்ளலாம். அதோடு ஒரு நடிகையாக இந்த கதைக்கு என் மகள் சரியாக இருப்பாள் என்று கருதியதால் அவளை நடிக்க வைத்தேன்'' என்றார்.