பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல்
இசை ஆசிரியையாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி இசை படித்தவர் சித்ரா. திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் பாடிக்கொண்டிருந்தபோது ஜேசுதாசின் அறிமுகம் கிடைத்து. அவரது கச்சேரிகளில் பாடினார். அதன் மூலம் மலையாள சினிமா வாய்ப்பு வந்தது.
அவரது இசை ஆசிரியர் ரவீந்திரன் மாஸ்டர்தான் அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். மலையாள இயக்குனர் பாசிலின் சிபாரிசு மூலம் இளையராஜாவை சந்தித்தார். பாசில் மலையாளத்தில் இயக்கிய 'நோக்காத தூரத்து கண்ணும்நட்டு' என்ற படத்தை தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற பெயரில் இயக்க தீர்மானித்திருந்தார். இளையராஜாவை இசை அமைப்பாளராக தேர்வு செய்திருந்தார்.
மலையாளப் படத்தில் இளம் பெற்ற 'கிளியே... கிளியே...' என்ற பாடல் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த பெண்ணையே பூவே பூச்சூடவா என்ற பாடலை பாட வைக்கலாம் எனறு இளையராஜா கூறியிருந்தார். அதனால் சித்ராவை இளையராஜாவை சந்திக்கச் சொன்னார் பாசில். சித்ராவை வாய்ஸ் டெஸ்ட் எடுத்த இளையராஜா அன்றே அவரை ஒரு பாடல் பாடவைத்தார். பாரதிராஜா இயக்குவதாக இருந்த 'பச்சைக்கொடி' என்ற படத்திற்காக பதிவு செய்யப்பட்ட பாடல் அது. பூஜைக்கேத்த பூவிது... என்ற பாடலை கங்கை அமரனோடு இணைந்து பாடினார்.
ஆனால் அந்த படம் எடுக்கப்படாததால் சித்ரா மனதொடிந்து போனார். ஆனால் பின்னர் அந்த பாடல் 'நீதானா அந்த குயில்' என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த படத்தை கதாசிரியர் கே.செல்வராஜ் இயக்கினார். ராஜா, ராஜீவ், லட்சுமி, ரஞ்சனி நடித்தனர்.