தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ்
மதறாஸ் மாபியா கம்பெனி என்ற படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் வில்லன் நடிகர் ஆனந்தராஜ். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் அவருடன் சென்னை திரைப்படக் கல்லுாரியில் படித்த இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆனந்தராஜை வாழ்த்தினர். கல்லுாரி காலங்களில் அவர் எப்படி இருப்பார் என்றும், தங்களின் முதல் படத்தில் அவரை நடிக்க வைத்த அனுபவம் குறித்து விரிவாக பேசினார்கள்.
ஆனந்த்ராஜ் பேசுகையில் ''நான் சினிமா பின்புலம் இல்லாமல் வந்தேன். நடிக்க வந்துவிட்டோம், எப்படி ஜெயிக்கப் போகிறோமோ என்று பயப்படுவேன். அந்த காலத்தில் சொந்த ஊருக்கு போகவே யோசிப்பேன். ஆர்.வி.உதயகுமார் தனது முதல் படத்தில் என்னை நடிக்க வைத்து கொடுமைப்படுத்தினார். கடும் காய்ச்சலில் இருந்தபோது பல மாடிகள் ஓட வைத்து படப்பிடிப்பு நடத்தினார். என் நண்பன் ஆர்.கே.செல்வமணியும் அப்படிதான். ஆனாலும், அப்படி கஷ்டப்பட்டு நடித்தது என்னை உறுதி ஆக்கியது.
ஒரு நாள் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென 'உங்க போர்ஷன் முடிந்தது, வீட்டுக்கு போங்க என்றார்கள். அடுத்து 2 நாட்கள் படப்பிடிப்பு கிடையாது என்றார்கள். அப்போது என் அப்பா மறைந்த தகவல் வந்தது. நான் நடிப்பில் ஜெயிக்க உறுதுணையாக இருந்தவர் அப்பா. அவர் இறுதிசடங்கில் நான் கூடவே இருக்கணும். வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது என நினைத்து, அவரே இப்படி லீவு வாங்கிக் கொடுத்து இருக்கிறார் என நினைத்தேன். நான் பல வலி, வேதனைகள், ஏமாற்றங்கள் தாங்கி இந்த இடத்துக்கு வந்துவிட்டேன். என் முதுகில் அவ்வளவு காயங்கள். கடந்த 40 ஆண்டுகளாக, 400 படங்களில் நடித்து இருக்கிறேன். என் அப்பாவை மறக்க முடியவில்லை' என்று மேடையிலே கண் கலங்கினார்.