'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது
தமிழகத்தை சேர்ந்த பத்மநாபன் தயாளன் கன்னட சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கர்நாடக அரசு விருது வழங்கியது. இந்த நிலையில் அவர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற புதிய படத்தை தொடங்கி உள்ளார்.
1950களில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறை தண்டனை பெற்று பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், இளவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். கே.வி.சபரீஷ் மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து தயாரிக்கிறார்கள். தர்புகா சிவா இசை அமைக்கிறார். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. படம் பற்றி இயக்குனர் தயாள் பத்மநாபன் கூறியதாவது : இந்தப் படம், லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஒரு பத்திரிகையாளர் மர்மக் கொலை வழக்கின் பின்னணியில் நடந்த அரசியல், சினிமா மற்றும் ஊடக கலவையை நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண குற்றக் கதை அல்ல. இது தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த உண்மை சம்பவத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவு செய்கிறது. இந்தப்படம் ஒரு வலிமையான கலை மற்றும் உண்மைச் செய்தி கலந்த படைப்பாக உருவாகிறது என்றார்.