ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ்
ரீரிலீஸ் என்பது கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே மீண்டும் ஆரம்பமாகி இருந்தாலும் கடந்த ஓரிரு வருடங்களில் அடிக்கடி ரீரிலீஸ் படங்கள் வெளியாக ஆரம்பித்தது. இந்த வாரம் நவம்பர் 14ம் தேதி தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் படங்கள் வெளியாக உள்ளன.
தமிழில் சேரன் இயக்கி நாயகனாகவும் நடித்து 2004ம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராப்' படம் வெளியாக உள்ளது. சினேகா, கோபிகா, மல்லிகா மற்றும் பலர் நடித்த இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். படம் வெளியான போது அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும், ஊடகங்களில் நல்ல விமர்சனத்தையும் பெற்ற படம். அப்போது பிறந்தவர்கள் இன்றைய 'ஜென் சீ' சினிமா ரசிகர்களாக இருப்பார்கள். அவர்களையும் கவரும் விதத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்.
அது போலவே 1989ல் வெளியான தெலுங்குப் படமான 'சிவா' படத்தை ரீரிலீஸ் செய்கிறார்கள். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் மற்றும் பலர் நடித்த படம். தமிழில் 'உதயம்' என்ற பெயரில் அப்போதே டப்பிங் ஆகி வெளிவந்து 175 நாட்கள் வரை ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது.
21 வருட இடைவெளியில் 'ஆட்டோகிராப்' படம், 36 வருட இடைவெளியில் 'சிவா' படம் வெளியாகும் நிலையில் இரண்டு படங்களுக்கும் இன்றைய இளம் சினிமா ரசிகர்கள் எப்படியான வரவேற்பைக் கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.