ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில்
நடிகர்கள் ரஜினியும், கமலும் நீண்ட வருடங்களுக்கு பின் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். அதற்கு முன்னதாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினி நடிப்பது முடிவானது. ரஜினியின் 173வது படமாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவித்தனர்.
திடீரென என்ன நடந்தது என தெரியவில்லை, சுந்தர் சி இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். அதில் ‛‛தவிர்க்க முடியாத சூழலால் இப்படத்திலிருந்து விலகுகிறேன். இது உண்மையில் எனக்கு கனவு நனவாகும் படம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன'' என குறிப்பிட்டு இருந்தார்.
கதை தொடர்பான பிரச்னையில் சுந்தர் சி விலகுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை, விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் இப்படம் தொடர்பான கேள்வி எழுந்தது. அதற்கு கமல், ‛‛நான் முதலீட்டாளன் எனது நட்சத்திரத்திற்கு(ரஜினி) பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்கு பிடிக்கும் வரையில் நாங்கள் கதைகளை கேட்போம். கதை நன்றாக இருந்தால் புதியவர்களும் இயக்கலாம்'' என்றார்.
இதன்மூலம் சுந்தர் சி சொன்ன கதை பிடிக்காமல் தான் ரஜினி விலகி உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.