நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வருபவர் நடிகை மீரா வாசுதேவன். தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்கமறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் மோகன்லால் நடித்த தேசிய விருது பெற்ற தன்மாத்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் காவேரி, சூர்யவம்சம், சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். அதேசமயம் சினிமாவில் நடித்ததை விட தனது திருமணங்களாலும் விவாகரத்துகளாலும் இன்னும் பிரபலமானார் என்று சொன்னால் சரியாக இருக்கும்.
கடந்த 2005ல் விஷால் அகர்வால் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது. ஐந்து வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2010ல் அவருடன் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் மீரா வாசுதேவன். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 2012ல் வில்லன் நடிகர் ஜான் கொக்கேனை திருமணம் செய்து கொண்டு 2016 ல் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் சில வருடங்கள் திருமணம் செய்யாமலேயே இருந்த மீரா வாசுதேவன் கடந்த வருடம் ஒளிப்பதிவாளர் விபின் புதுயங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் நடைபெற்று ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் தற்போது அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார் மீரா வாசுதேவன். இதனைத் தொடர்ந்து, “நான் 2025 ஆகஸ்ட்டிலிருந்து சிங்கிளாக இருக்கிறேன். தற்போது தான் என் வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான மற்றும் அமைதியான நிலையில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் மீரா வாசுதேவன்.