டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது
இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய ஜெபி இயக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் 'ஐபி 180'. இந்த படத்தில் மறைந்த டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்திலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். கே.பாக்யராஜ், தமிழ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டேனியல் பாலாஜியின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் வெளியீடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது படம் வருகிற 28ம் தேதி வெளியிடப்படஇருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் ஜெபி கூறும்போது “ஆபத்தான மருத்துவ மற்றும் உளவியல் நிலையைக் குறிப்பிடும் ஒரு குறியீடுதான் 'ஐபி 180' . இதில் போதைப்பொருட்கள் புழக்கத்தால் தனிநபர்கள் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்த கட்டத்தில் அவர்களின் ஆறாவது அறிவு தடுமாறி விலங்குகளைப் போல நடந்து கொள்கிறார்கள். இவர்கள் மருத்துவரீதியாக 'ஐபி 180' ஆக உருவகப்படுத்துவார்கள். இந்தக் கதையில், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரம் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவரிடம் சிக்கிக் கொண்ட மருத்துவராக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜிக்குள் இருக்கும் அரக்கத்தன்மையை மாற்ற இடைவிடாமல் போராடுகிறார். இந்த 'தேவதை' அந்த 'பிசாசை' காப்பாற்றுவதில் வெற்றி பெற்றாரா அல்லது இறுதியில் அழிப்பாரா என்பது படத்தின் கதை என்றார்.