யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை
சமூகவலைதளங்களில் அனுமதியின்றி தனது போட்டோ, பட்டம், குரல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை, உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் போட்டோக்களை ஏற்கனவே பயன்படுத்தி இருந்தால் அதனை நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஈட்டிய வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார் இளையராஜா.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இளையராஜாவின் புகழ் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சார்ந்தது அல்லவா?. தளங்களில் கிடைக்கும் எந்த இசையும் திரைப்படப் பெயர் அல்லது நடிகரின் பெயர், இசையமைப்பாளரின் பெயர் ஆகியவற்றுடன்தான் காட்சிப்படுத்தப்படுகிறது. பெயரைப் பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என விசாரணையின் போது நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன், சில சேனல்கள் இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி மீம்ஸ் உருவாக்குகின்றன. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று அவற்றை தக்க ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் காரணமாக அவரது இமேஜ் பாதிக்கப்படுகிறது என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.
டில்லி உயர்நீதிமன்றத்தில் சில நடிகர்கள், நடிகைகளுக்கு இது மாதிரியான தீர்ப்பு வழங்கப்பட்டதும், சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இளையராஜாவின் புகைப்படங்கள், பெயர் ஆகியவற்றை யு டியூப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் 'டியூட்' படத்தில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து அவர் தரப்பில் நீதிமன்றத்தை நாடினர். அவரது பாடல்களை தக்க அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது என இளையராஜா தரப்பில் பல முறை கேட்டுக் கொண்டாலும் சிலர் அனுமதி பெறாமலே பயன்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த முறை இந்த சர்ச்சை வந்த போது ஒரு மீம்ஸில் இளையராஜா உருவத்தை 'ஏஐ' மூலம் நடனமாட வைத்து கொச்சைப்படுத்தி இருந்தனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அது போல பல தரக் குறைவான மீம்ஸ்களும் வெளிவந்தன.