வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ்
தெலுங்குத் திரையுலகத்தின் பாரம்பரிய குடும்பங்களாக மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், தயாரிப்பாளர் ராமா நாயுடு ஆகியோரது குடுமபங்கள் இருக்கின்றன. சென்னையில் செயல்பட்டு வந்த தெலுங்கு திரைப்படத் தயாரிப்புகள் 80 களின் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக ஹைதரபாத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. அடுத்த சில வருடங்களில் முழுவதுமாக அங்கே மாறியது. அப்போது நாகேஸ்வரராவ், ராமா நாயுடு உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் ஹைதரபாத்தில் சினிமா ஸ்டுடியோக்களை நிர்மாணித்தார்கள்.
நாகேஸ்வரராவ் குடும்பத்தினர் 'அன்னபூரணா ஸ்டுடியோஸ்', ராமா நாயுடு குடும்பத்தினர் 'ராமா நாயுடு ஸ்டுடியோஸ்' ஆகியவற்றை உருவாக்கி நடத்தி வருகிறார்கள். இப்போதும் அந்த ஸ்டுடியோக்கள் செயல்பட்டு வருகின்றன. அவரவரர் வாரிசுகள் அந்த ஸ்டுடியோக்களை நிர்வகித்து வருகிறார்கள்.
இதனிடையே, ஹைதராபாத் மாநகராட்சிக்கு உரிய வணிக வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக அந்த இரண்டு ஸ்டுடியோக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 1,92,000 சதுர அடியில் இருக்கும் அன்னபூரணா ஸ்டுடியோஸ் நிர்வாகம், 81,000 சதுர அடிக்கு மட்டும் வரி செலுத்துகிறார்களாம். 11 லட்சம் செலுத்த வேண்டிய வரிக்கு 49,000 மட்டுமே செலுத்தி வருகிறார்களாம். அது போல, ராமா நாயுடு ஸ்டுடியோஸ் நிர்வாகம் 2,73,000 வரிக்குப் பதிலாக, 76,000 மட்டுமே செலுத்தி வருகிறார்களாம்.