உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம்

நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம்

தமிழ்த் திரைப்படங்களுக்கான வியாபாரம் என்பது ஒரு காலத்தில் தியேட்டர் உரிமைகளாக மட்டும் இருந்தது. அதன்பின் அரசு தொலைக்காட்சி வந்த பிறகு படங்களை ஒளிபரப்புவதற்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. வாரம் ஒரு முறைதான் அந்தக் காலங்களில் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும். 90களின் துவக்கத்தில் சாட்டிலைட் டிவிக்கள் வந்த பிறகு படங்களுக்கான சாட்டிலைட் டிவி உரிமை என்பது புதிய வருவாயை ஏற்படுத்தித் தந்தது. அதன் பிறகு சில சாட்டிலைட் டிவிக்கள் வர அவர்களுக்கு இடையிலான போட்டியில் படங்களின் உரிமைகளை போட்டி போட்டு வாங்கினார்கள்.

கடந்த ஐந்து வருடங்களில் புதிதாக ஓடிடி உரிமை என்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது. சில படங்களுக்கு சாட்டிலைட் டிவி உரிமைக்கான விலையை விடவும் ஓடிடி உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கினர். இதனால், தியேட்டர் வியாபாரத்தை மட்டும் நம்பி இருக்காமல், சாட்டிலைட் டிவி உரிமை, ஓடிடி உரிமை, ஆடியோ உரிமை என அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே போட்ட முதலீட்டை தயாரிப்பாளர்கள் எடுக்க ஆரம்பித்தனர். இன்னும் சொல்லப் போனால் ஓடிடி உரிமை என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரும் முதலீடாக இருந்தது.

சமீபத்தில் தனது தென்னிந்திய மையமாக ஐதராபாத் நகரைத் தேர்வு செய்து அங்கு புதிய அலுலவகத்தைத் திறந்தது நெட்பிளிக்ஸ் நிறுவனம். அதனால் மகிழ்ச்சியடைந்த தென்னிந்திய தயாரிப்பாளர்களுக்கு அடுத்து அதிர்ச்சிதான் காத்திருந்தது. இனி தென்னிந்தியப் படங்களை வாங்கப் போவதில்லை என்ற அவர்களது முடிவுதான் அது. அதிக விலை கொடுத்து படங்களை வாங்குவதை விட வெப் சீரிஸ்கள், சொந்தமாக ஓரிஜனல்ஸ் ஆகியவற்றைத் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதே வழியை மற்ற ஓடிடி நிறுவனங்களும் பின்பற்றினால், அது தயாரிப்பாளர்களுக்கு பாதகமாகவே முடியும்.

தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பாக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட சில தென்னிந்தியப் படங்கள் படுதோல்வி அடைந்ததே அதற்குக் காரணம் என்கிறார்கள். நம்பி வாங்கி ஏமாற்றமடைவதை விட தாங்களாகவே படத்தை உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். இது எந்த மாதிரியான பாதிப்பை தென்னிந்திய திரையுலகத்திற்கு ஏற்படுத்தும் என்பது இனிமேல்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !