உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு

இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு


திரைப்பட பின்னணி மற்றும் மேடைப் பாடகியான மாலதி லக்ஷ்மன், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் பார்த்திபன் கனவு படத்தில் வாடி மச்சினியே, திருடா திருடி படத்தில் மன்மத ராசா, திருப்பாச்சியில் கும்பிட போன தெய்வம், அன்பே சிவம் போன்ற படங்களில் பாடியுள்ளார். கன்னடம், தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். குறிப்பாக தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், ஆர்யா (2004) படத்தில் இடம்பெற்ற ஆ அந்தே அமலாபுரம் பாடலும் அவரது ஹிட் லிஸ்டில் ஒன்று. இவருடைய கணவர் லக்ஷ்மன் நடத்தி வரும் 'லக்ஷ்மன் ஸ்ருதி' இசைக்குழுவில் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக, பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. இதற்காக மாலதி லக்ஷ்மன், முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

இது தொடர்பாக பேசிய மாலதி லக்ஷ்மன், அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம், எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத்துறைக்கு வலுவூட்ட என்னால் முடிந்த அனைத்து பங்களிப்பையும் வழங்குவேன். அதோடு அனைவரின் ஒத்துழைப்போடு இசை மற்றும் இதர கலைகளை கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !