தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள்
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‛ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன. வரும் பொங்கலை முன்னிட்டு ஜன., 9ல் படம் ரிலீஸாகிறது. தற்போது படத்தின் வியாபார பணிகள் ஏரியா வாரியாக துவங்கி உள்ளன.
இந்த படத்திலிருந்து விஜய், அனிருத், அறிவு பாடிய ‛தளபதி கச்சேரி' என்ற முதல் பாடலை வெளியிட்டனர். இதற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து படத்தின் இசை வெளியீட்டை வரும் டிச., 27ல் மலேசியாவின் புக்கிட் ஜலில் ஸ்டேடியமில் பிரமாண்டமாய் நடத்துகின்றனர். இதற்கான பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன.
‛ஜனநாயகன்' விஜய்யின் கடைசி படம் என்பதால் இசை வெளியீட்டை பிரமாண்டமாய் திருவிழா போல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக ‛தளபதி திருவிழா' என்ற பெயரில் பாடல் வெளியீட்டுடன், பிரமாண்ட இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் விஜய்யின் சினிமா கேரியரில் பாடிய பல பாடகர்கள் பாடுகின்றனர். குறிப்பாக சைந்தவி, திப்பு, அனுராதா ஸ்ரீராம், ஆண்ட்ரியா, எஸ்பிபி சரண் ஆகியோர் விஜய்க்காக தாங்கள் பாடிய பாடல்களை பாடுவதாக வீடியோ மூலம் அறிவித்துள்ளனர். இவர்கள் தவிர மேலும் பலர் இந்த நிகழ்ச்சியில் இணைகின்றனர்.