நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு தொடர்ந்து தனக்கு பிடித்தமான கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித். கார் பந்தய சுற்றுப்பயணத்திற்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க துவங்குவார் என தெரிவிக்கின்றனர்.
துபாய், உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த சர்வதேச கார் பந்தயங்களில் அவரின் 'அஜித்குமார் ரேஸிங்' அணி முதல் மூன்று இடங்களுக்குள் வென்று சாதித்துள்ளது. இந்த நிலையில், எஸ்.ஆர்.ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம் இந்த ஆண்டின் 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது வழங்கியுள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவுக்கு குடும்பத்துடன் சென்று விருதினைப் பெற்றுக் கொண்டார் அஜித்.
இந்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவரது மனைவி ஷாலினி, ''வெனிஸில் என் கணவருக்கு '2025ம் ஆண்டின் ஜென்டில்மேன் டிரைவர்' விருது வழங்கப்படும் போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமை கிடைக்கிறது. தொழிலதிபரும் ரேசிங் டிரைவருமான பிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
விழாவில் அஜித் பேசியதாவது: இங்கு இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. இந்தத் தருணத்தில் ரேசர் பிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் அன்பான நபர், அற்புதமான மனிதர், பலருக்கும் அவர் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது. இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
என்னுடைய குடும்பத்திற்கும், என் திரைத்துறை நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மோட்டார் ஸ்போர்ட்டை அடையாளப்படுத்தத் துவங்கியிருக்கும் மீடியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடத்தில் நானொரு கோரிக்கையும் வைக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கும் இது போன்ற ரேஸிங் சீரிஸ்களைக் கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன். இப்படியான சீரிஸ்களை நடத்துவதற்கு நாங்களும் (இந்தியா) விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்டில் சர்வதேச அளவிற்குச் செல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்'' எனக் கூறினார்.