தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா
கன்னட நடிகர் உபேந்திரா சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள ஆந்திரா கிங் தாலுகா என்கிற படத்தில் ஆந்திரா சூப்பர் ஸ்டார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபகாலமாகவே தெலுங்கில் இருந்து கர்நாடகாவில் வெளியாகும் படங்கள் தங்களது புரமோஷன் நிகழ்ச்சிகளில் போஸ்டர்களில் கன்னட மொழியில் பெயர்களை குறிப்பிடுவது இல்லை என்றும் அதிக அளவில் கன்னட டப்பிங் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடாமல் தெலுங்கு வெர்சனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறார்கள் என்றும் கன்னட அமைப்பை சேர்ந்த பலர் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் உபேந்திராவிடம் கேட்கப்பட்ட போது, “நிச்சயமாக தெலுங்கு மட்டுமல்ல.. எந்த மொழியாக இருந்தாலும் கன்னடத்தில் வெளியாகும்போது அந்த மொழிக்குரிய முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். கன்னடத்தில் டப்பிங் செய்யப்படும் போது கன்னட மொழிகளில் அதன் போஸ்டர்கள் இருக்குமாறு நிச்சயம் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்ல இங்கே நேரடி தெலுங்கு படங்களை விட கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட படங்களே வசூலை அதிகம் பெறுகின்றன. அதற்கு புஷ்பா படத்தை உதாரணமாக சொல்லலாம்” என்று கூறியுள்ளார்.