கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம்
சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் 'தி லாஸ்ட் பேக்கப்'. இது ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படம். இதன் மூலக் கதையை பிரபல ஒளிப்பதிவாளரும், அகாடமியின் டீனுமான சி.ஜே.ராஜ்குமார் எழுதியுள்ளார். மாணவி ஸ்ரீ ரிதன்யா இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படம் தற்போது கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் உலகளாவிய பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. வருகிற 26ம் தேதி(நாளை) திரையிடப்படுகிறது. திரையிடலுக்கு பிறகு படம் தொடர்பான விவாதங்களும், கருத்தரங்கும் நடக்கிறது.
இது குறித்து படத்தை இயக்கி உள்ள ஸ்ரீ ரிதன்யா கூறும்போது, இது முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. 3030ம் ஆண்டில் சென்னை எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் புனைவுகதை. தொழில்நுட்பம் மட்டுமே ஆட்சி செய்யும் எதிர்கால உலகிலும், மனித உணர்வுகள் என்றும் அழியாது என்பதை நெகிழ்ச்சியுடன் பேசுகிறது. மிகுந்த போட்டிக்கு இடையே இந்த படம் கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வாகி உள்ளது என்றார்.