உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின்

பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின்


வட இந்தியரான கே.அமர்நாத், தமிழில் இயக்கிய படம் 'மின்னல் கொடி'. தமிழின் முதல் முழுநீள சண்டைப் படம் இது. இந்தப் படத்தில் நடித்த கே.டி. ருக்மணி தான் தமிழ் சினிமாவில் முதல் ஆக்ஷன் ஹீரோயின். சண்டைக் காட்சிகளுக்காகவே இந்த படத்தின் கதை, திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருந்தது.

மோகினி என்ற இளம்பெண், தன்னுடைய தந்தையை இழக்கிறார். அவளுடைய சொத்தை தந்திரமாகக் கைப்பற்றி, அவளையும் அவளுடைய வேலைக்காரனையும் விரட்டி விடுகிறார் உறவினர். அவர்கள் தங்குவதற்கு கூட இடமில்லாமல் அலைகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் அலைந்து கொண்டிருக்கும்போது, 'மின்னல்கொடி' என்ற கொள்ளைக்காரனை, போலீஸிடம் இருந்து காப்பாற்றுகிறார்கள். அவர் இறக்கும் முன், மோகினியை தனது கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவியாக நியமிக்கிறார்.

ஆண் போல வேடமணிந்து 'மின்னல்கொடி'யாக களமிறங்குகிறார் மோகினி. ஆனால், அவளுக்கு நல்ல மனம் இருக்கிறது. அதாவது, பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுவது. அதோடு தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்குகிறாள். இதுதான் படத்தின் கதை.

மின்னல்கொடியாக, கே.டி.ருக்மணி நடித்தார். படத்தில் மொத்தம் பத்து சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எல்லா காட்சிகளிலுமே டூப் இன்றி நடித்தார் ருக்மணி. இப்படத்துக்காக கத்திச் சண்டை, குதிரை சவாரி என ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து மிரட்டினார்.

குதிரை சண்டை காட்சி படமானபோது கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மாதக் கணக்கில் படுத்த படுக்கையில் கிடந்ததால் இனி அந்தப் படத்தில் நடிக்க மாட்டார் என்றார், அவருடைய தாயார். ஆனால், ஒப்பந்தம் இருந்ததால் வேறு வழியில்லாமல், உடல் குணமான பின் படத்தை முடித்துக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அதிரடியான ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதல் சண்டை படம் 'மின்னல் கொடி', முதல் ஆக்ஷன் ஹீரோயின் ருக்மணி. 1937ம் ஆண்டு வெளிவந்த படம் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !