பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி”
தமிழ் திரையுலகம் கண்ட தலைசிறந்த ஜாம்பவான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பலரில் குறிப்பிடும்படியான ஒருவர் என்றால் அது “முக்தா பிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரும், இயக்குநருமான 'முக்தா' வி சீனிவாசன் என்பது கலையுலகை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே. தான் எடுக்கப் போகும் திரைப்படத்தின் கதையை தெரிவு செய்வதிலிருந்து, திட்டமிடப்பட்ட பட்ஜெட்டிற்குள் அந்தப் படத்தை எடுத்து முடித்து, அதை வெற்றி பெறச் செய்யும் சாதுர்யம் அறிந்த படைப்பாளியான இவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குநர் என்பதையும் தாண்டி, ஒரு மிகச் சிறந்த படிப்பாளியாகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகின்றார். மூன்று நாவல்கள் உட்பட 350 சிறு கதைகள் வரை எழுதியிருக்கும் இவரை, வெள்ளித்திரை இயக்குநராக வெளிச்சம் போட்டுக் காட்டிய திரைப்படம்தான் “முதலாளி”.
வேங்கட ராமானுஜம் என்பவரின் “முதலாளி” என்ற மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, அதை அப்படியே அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்திருந்தனர். “எம் ஏ வி பிக்சர்ஸ்” என்ற பதாகையின் கீழ், தயாரிப்பாளர் எம் ஏ வேணு தயாரித்த இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் முக்தா வி சீனிவாசன் ஒரு இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். நான்கே மாதங்களில் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படத்தில்தான் 'பிரமிளா தேவி' என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை தேவிகாவும் வெள்ளித்திரை நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியிருந்தார்.
கவிஞர் கா மு ஷெரீப் பாடல்களை எழுத, திரையிசைத் திலகம் கே வி மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக ஆரபி ராகத்தில் மெட்டமைக்கப்பட்டு, டி எம் சவுந்தரராஜன் குரலில் ஒலித்த “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே” என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
1957ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதின் சான்றிதழைப் பெற்றிருந்ததோடு, வசூலிலும் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த திரைப்படமாக அமைந்து, ஒரு முழுமையான வெற்றி இயக்குநராக முதல் படத்திலேயே முக்தா வி சீனிவாசனை கலையுலகிற்கு அடையாளம் காட்டிய திரைப்படமாகவும் அமைந்திருந்ததுதான் இந்த “முதலாளி” திரைப்படம்.