சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் நாளை (நவ.,28) தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது சிரஞ்சீவி ரசிகர்களிடத்தில் கீர்த்தி சுரேஷ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதற்கு என்ன காரணம் என்றால், இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வெளியான 'ரகு தாத்தா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது, அவரிடத்தில் சிரஞ்சீவி, விஜய் இருவரில் யார் சிறந்த நடனக் கலைஞர் என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, விஜய்தான் சிறந்த நடனக் கலைஞர் என்று கூறியிருந்தார்.
கீர்த்தி சுரேஷ் சொன்ன இந்த பதில் வைரலாகி சிரஞ்சீவி ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டது. சோசியல் மீடியாவில் விஜய், சிரஞ்சீவி ரசிகர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது ரிவால்வர் ரீட்டாவின் ஹைதராபாத் விளம்பர நிகழ்ச்சியின்போது, இந்த சர்ச்சைக்கு கீர்த்தி சுரேஷ் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''நான் சிரஞ்சீவி சாருக்கு எவ்வளவு பெரிய ரசிகை என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் எனக்கு பிடித்த நடிகர், நடன கலைஞர். எப்போது என்னை பார்த்தாலும் நான் நடிக்கும் படங்கள் குறித்து அவர் அக்கறையோடு விசாரிப்பார். எந்த மாதிரி கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவுரை சொல்வார். அந்த வகையில் அவரது ரசிகர்களை நான் காயப்படுத்தி இருந்தால் மிகவும் வருந்துகிறேன். நான் வேண்டுமென்றே அப்படி சொல்லவில்லை.
அதோடு நான் விஜய்யை அதிகமாக பார்க்கிறேன். அந்த கேள்விக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்றபோதும் அவரது பெயர் நினைவுக்கு வந்ததால் உடனே சொல்லி விட்டேன். ஆனால் அவர்கள் இரண்டு பேருமே தங்களது துறைகளில் ஜாம்பவான்கள்தான். அதனால் யாரையாவது நான் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.