தயாரிப்பாளர் ஆனார் 'டாடா' இயக்குனர்: கவுதம் ராம் கார்த்திக் அதில் ஹீரோ
இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி, சினிஷ் உட்பட பலர் தயாரிப்பாளர் ஆகி உள்ளனர். அந்த வரிசையில் கவின் நடித்த 'டாடா' படத்தை இயக்கிய கணேஷ்பாபுவும் தயாரிப்பாளர் ஆகி உள்ளார். அவர் தயாரிக்கும் படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். அஞ்சனா நேத்ரன் ஹீரோயின். பெயரிடப்படாத இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கியமான வேடத்தில் வருகிறார். அரசியல் காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ராஜூமுருகன் உதவியார் தினா ராகவன் இயக்குகிறார். சாம்.சி.எஸ்.இசையமைக்கிறார்.
இப்போது ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தை இயக்கி வருகிறார் டாடா கணேஷ்பாபு. இதுவரை கவுதம் கார்த்திக் ஆக இருந்தவர், இப்போது தனது பெயரில் ராம் சேர்த்து கவுதம் ராம் கார்த்திக் ஆகியுள்ளார். அந்த ராம் யார் என்று விசாரித்தால் அவர் தாத்தாவும், பிரபல நடிகருமான முத்துராமன் பெயரை சுருக்கி ராம் ஆக வைத்துள்ளார். தாத்தா, அப்பா பெயரை தனது பெயருக்கு பின்னால் வைத்துள்ள ஒரு தமிழ் நடிகர் இவர்தான் என்கிறார்கள் கோலிவுட்டில்.