பிளாஷ்பேக்: திருமண நாளில் படங்களை வெளியிட்ட கே.பாலாஜி
தமிழ் சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பர்சனல் சென்டிமெண்ட் உண்டு. குறிப்பாக அந்தக் கால கலைஞர்களில் சாண்டோ சின்னப்பா தேவர் எல்லோருக்கும் சம்பளத்தை பணமாகத்தான் கொடுப்பார், காசோலை, கடன் இது எதுவுமே அவர் வாழ்க்கையில் இருந்தில்லை. இப்படியான ஒரு வித்தியாசமான சென்டிமெண்ட் தயாரிப்பாளரும், நடிகருமான கே.பாலாஜியிடம் இருந்தது.
அது அவர் தயாரிக்கும் படங்களை ஜனவரி 26ம் தேதிதான் வெளியிடுவார், படத்திற்கு பூஜை போடும்போதே வெளியீட்டு தேதி ஜனவரி 26 என்று அறிவித்து விடுவார். ஜனவரி 26 என்ன ஸ்பெஷல் என்றால், அது அவரது திருமண நாள், தன் மனைவி ஆனந்தவல்லியை திருமணம் செய்த பிறகுதான் தனது வாழ்க்கையில் எல்லாம் நடந்ததாக அவர் நம்பினார். மனைவி மீது பேரன்பு வைத்திருந்தார். இதனால்தான் இந்த சென்டிமெண்ட்.
சிவாஜியும் கே.பாலாஜியும் இணைந்த 'ராஜா, உனக்காக நான், தீபம், நீதிபதி, பந்தம், மருமகள், குடும்பம் ஒரு கோவில்', ரஜினி நடித்த 'பில்லா, தீ', கமல் நடித்த 'வாழ்வே மாயம்', மோகன், பூர்ணிமா நடித்த 'விதி' உள்ளிட்ட பல படங்களை ஜனவரி 26ம் தேதி அன்றே வெளியிட்டார். இந்த தேதியில் வெளியிட்ட அனைத்து படங்களுமே அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.