ஹீரோயின் ஆன 'பிக்பாஸ்' ஜனனி
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா தயாரிக்கும் படம் 'ஆல் பாஸ்'. 'நிறங்கள் மூன்று, தருணம்' போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் நாயகனாக நடிக்கிறார்.
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர், பல விளம்பர படங்களில் நடித்தவர் ஜனனி. பிக்பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி 'லியோ' படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். அவர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, இயக்குனர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா , சத்யா, இயக்குனர் மூர்த்தி மற்றும் கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் 'பாண்டியநாடு, எதிர்நீச்சல்' போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லொகிட்ஷவா இந்த படத்தின் வில்லனாக நடிக்க, 'பாபநாசம்' படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், 'பைசன்' படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தில்ராஜு ஒளிப்பதிவு செய்கிறார், ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார்.
அறிமுக இயக்குனர் மைதீன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பகை, கொலைன்னு தமிழ் சினிமாவில் காட்டி இருக்காங்க. முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.
அப்படி பகை வன்முறை இல்லாத வடசென்னையில் வாழும் மூன்று குடும்பங்கள் பாசம், நட்பு, சந்தோஷம், துக்கம் என்று வாழ்க்கையை அவர்களது போக்கில் வாழ்கிறார்கள். ஆனால் இயற்கை அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறது, அது என்ன டெஸ்ட் அதில் பாஸ் ஆனார்களா இல்லையா என்பதே இந்த படத்தின் திரைக்கதை. குடும்ப உணர்வுகளை சினிமாவில் சொல்லிய அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்த ஆல் பாஸ் படமும் இருக்கும். என்றார்.