நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார்
ஜனாதிபதி விருது பெற்ற திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் தேவதாஸ், தன்னுடைய 88வது வயதில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நேற்று (நவ.,30) இரவு 10:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
திரைப்பட தயாரிப்பாளர் எஸ் எம் எஸ் சுந்தரராமன் ருக்மணியின் புதல்வர்களில் ஒருவரான தேவதாஸ், இயக்குனர் ஏ பீம்சிங்கின் பல 'பா' வரிசை வெற்றி படங்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிரபல நடிகை தேவிகாவை காதல் திருமணம் செய்து பிரிந்தார். இத்தம்பதியருக்கு பிறந்தவர்தான் கனக மகாலட்சுமி என்ற பெயர் கொண்ட நடிகை கனகா. நடிகை தேவிகாவை பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்ட தேவதாஸ், தனது மகள் கனகா உடன் பேசிக்கொள்வதில்லை.
'வெகுளிப் பெண்' எனும் படத்தை தமிழிலும் தெலுங்கிலும் தயாரித்து இயக்கினார். கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த தேவதாஸ், நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார்.