உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி

சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி


தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக அறியப்படுபவர் சுரேஷ் பொப்பிலி. கடந்த மாதம் தெலுங்கில் வெளியான 'ராஜு வெட்ஸ் ரம்பை' திரைப்படத்தில் இவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ஆனால் கடந்த 2022ம் வருடம் இவர் கிட்டத்தட்ட திரையுலகை விட்டு ஒதுக்கப்படும் சூழல் உருவானது. அதிலிருந்து தன்னை மீட்டது நடிகை சாய்பல்லவி தன் மீது வைத்த நம்பிக்கையும் அவரது வார்த்தைகளும் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார் இசையமைப்பாளர் சுரேஷ் பொப்பிலி.

கடந்த 2022ல் ராணா, சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் 'விராட பருவம்' திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைத்தவர் சுரேஷ் பொப்பிலி தான். ஆனால் இந்த படத்திற்கு அவர் இசையமைத்துக் கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட மதுவுக்கு பூரண அடிமையாகி இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இதனால் படத்தின் இசைப்பணிகள் பாதிக்கப்படவே, அவரை பாதியிலே நீக்கிவிட்டு வேறு இசையமைப்பாளரை நியமிக்க முடிவு செய்தார்கள். அந்த சமயத்தில் இவருக்காக பரிந்து பேசிய வெகு சிலரில் நடிகை சாய் பல்லவி குறிப்பிடத்தக்கவர்.

தனக்காக இயக்குனரிடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் பேசி அவரே தொடர்ந்து பணி புரியட்டும், அவரது திறமையை நிரூபிப்பார், அவரை நீக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்த பிறகு மீண்டும் தன்னை அந்த படத்தில் இணைத்து கொண்டார்கள் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் சுரேஷ் பொப்பிலி.

மேலும் அவர் கூறும்போது, “கிட்டத்தட்ட ஆல்கஹாலுக்கு அடிமையாகி, வேலையில் என்னால் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு சாய் பல்லவி மூலம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு வழியாக அந்த படத்தை முடித்ததும் அத்துடன் அவ்வளவுதான் என்று நினைத்தபோது சாய் பல்லவியிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது. அதில் உண்மையாக அக்கறையுடன் பேசிய அவர், என்னுடைய வேலையின் மதிப்பையும் அதற்கான பொறுப்பையும் உணர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த படம் வெளியானால் முதலில் ரசிகர்கள் பாராட்டுவது உங்களுடைய இசையைத்தான் அதற்குப் பிறகுதான் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்.. அதன் பிறகு தான் நடிகர்கள் என பார்ப்பார்கள்.. அதனால் இந்த தவறான பழக்கம் உங்களுடைய திறமைகளை மூடி மறைத்து விடக்கூடாது, உங்களுக்கு கிடைக்க வேண்டிய தகுதிகளை தடுத்து விடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

அதன் பிறகு தான் ஆல்கஹாலின் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியில் இறங்கினேன். முதல் மூன்று மாதங்கள் கிட்டத்தட்ட நரகம் போல இருந்தது. ஆனாலும் தற்போது அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்து விட்டேன். இதோ இப்போது ராஜூ வெட்ஸ் ரம்பை படத்தின் பாடல்கள் வரவேற்பு பெற்றதில் சாய்பல்லவியின் வார்த்தைகள் எந்த அளவிற்கு உண்மை என்பதை உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !