உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம்

துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம்

மலையாள வில்லன் நடிகரான விநாயகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். அதை தொடர்ந்து தற்போது மம்முட்டியுடன் இணைந்து களம்காவல் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் நாளை (டிசம்பர் 5) வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2016ல் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுடனும் நண்பராக இவர் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது களம் காவல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் விநாயகன், துல்கர் சல்மானுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறும்போது, ”கம்மட்டிப்பாடம் படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பு உண்மையிலேயே அபரிமிதமானது. காரணம் அந்த கதையின் பின்னணி களத்தில் நானும் உடன் நடித்த மணிகண்ட ஆச்சாரியும் ஏற்கனவே பழக்கமானவர்கள். அந்த வாழ்க்கையுடன் ஓரளவு வாழ்ந்து பழகியவர்கள். ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறையில் இருந்து வந்த துல்கர் சல்மான் அந்த கதாபாத்திரமாக மாறி நடித்தது தான் உண்மையிலேயே சிறப்பான விஷயம். அந்த வருடத்தில் மிகச்சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

கம்மட்டிப்பாடம் படத்தில் நடித்ததற்காக விநாயகனுக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதும் இவர்கள் இருவருடன் நடித்த மணிகண்ட ஆச்சாரிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !