கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2'
போயபதி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'அகண்டா 2'. பான் இந்தியா படமாக இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தெலங்கானா தவிர மற்ற மாநிலங்களில் நேற்று வரை அதன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வெளிநாடுகளிலும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் படத்தை ஆவலுடன் முன்பதிவு செய்து நேற்றைய பிரிமியர் காட்சிக்கும் காத்திருந்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரையுலகினருக்கும் அதிர்ச்சியளித்தது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கனத்த இதயத்துடன், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் 'அகண்டா 2' திட்டமிட்டபடி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
இது எங்களுக்கு வலி மிகுந்த தருணம், மற்றும் படத்தை எதிர்பார்த்திருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும், திரைப்பட ஆர்வலருக்கும் இது ஏற்படுத்தும் ஏமாற்றத்தை நாங்கள் உண்மையிலேயே புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தை விரைவில் தீர்க்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். ஏற்படுத்திய சிரமத்திற்கு எங்கள் உண்மையான மன்னிப்பு. உங்கள் ஆதரவே எங்களுக்கு உலகமே. விரைவில் ஒரு நேர்மறையான புதுப்பிப்பை பகிர்ந்து கொள்வதாக உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிறுவனம் தயாரித்த முந்தைய படங்களுக்கு பைனான்சியர்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை காரணமாகத்தான் இந்த சிக்கல் ஏற்பட்டது என்கிறார்கள்.