உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன்

கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன்


பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவரை பற்றி திரையுலகினர் கூறுகையில் 175க்கும் அதிகமான படங்களை தயாரித்தவர் ஏவிஎம் நிறுவனத்தை சேர்ந்தவர் சரவணன். இந்தியளவில் 100 படங்களை தயாரித்தவர்கள் மிகக்குறைவு. இப்படிப்பட்ட பெருமை கொண்ட பாரம்பரிய நிறுவனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் பணிவும், அவரின் எளிமையும் திரைத்துறையில் அவ்வளவு பிரபலம்.

அனைவரையும் மரியாதையாக அழைப்பார், மரியாதையாக நடத்துவார். குறிப்பாக, தனது கைகளை கட்டிக்கொண்டு பேசுவது அவர் ஸ்டைல். சில சமயம் விருந்தினர்களை உட்கார வைத்து அவர் எழுந்து நின்று பேசுவார். எப்போதும் வெள்ளை நிற உடைகளை அணிவார். சினிமா நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு சிம்பிளாக வந்து செல்வார். முன்னணி நடிகர்கள், நடிகைகளை வைத்து படம் தயாரித்து இருந்தாலும், தங்கள் பட செய்திகள் வந்தால், தன்னை பற்றி செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், போட்டோகிராபர்களுக்கு நன்றி கடிதம் எழுதி அனுப்புவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.

சினிமா மேடைகளில் மிக சுருக்கமாக தெளிவாக பேசுவார். இதுவரை யாரையும் தவறாக பேசியது இல்லை. எந்த மீடியாவிலும் யாரையும் விமர்சித்து, தவறாக பேட்டி கொடுத்தது இல்லை. பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் பந்தா இல்லாத அவரை போன்ற தயாரிப்பாளர்களை இனி பார்ப்பது அபூர்வம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !