உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார்

கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ல் வெளியான படம் பம்பாய். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்திருந்தார். இந்து, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை பற்றி பேசிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இதை கொண்டாடும் விதமாக கேரளாவை சேர்ந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சி கழகம் அந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிகழ்வில் மணிரத்னம் ஏற்கனவே கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் மனிஷா கொய்ராலாவும் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. இதில் கலந்துகொள்ள அரவிந்த்சாமிக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார்களாம்.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் உள்ள பேக்கல் துறைமுகம் ரொம்பவே பிரசித்தி பெற்றது. குறிப்பாக பம்பாய் படத்தில் இடம்பெறும் உயிரே உயிரே பாடல் முழுவதும் இந்த துறைமுகத்தில் தான் படமாக்கப்பட்டது. சொல்லப்போனால் அந்த ஆண்டில் தான் இந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சிக் கழகமும் துவங்கப்பட்டு 30 வருடங்களை தற்போது நிறைவு செய்கிறது. பம்பாய் படம் வெளியான பிறகு இந்த பேக்கல் ரிசார்ட் மிகப்பெரிய அளவில் பிரசித்தி பெற்று வளர்ந்துள்ளது. தங்களது இந்த 30 ஆண்டு பயணத்தை பம்பாய் பட 30ம் ஆண்டு விழாவாக சேர்த்துக் கொண்டாடும் விதமாகத்தான் இந்த நிகழ்வுக்கு இவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !