உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு

நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு

கேரள நடிகை கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீபிற்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 6 பேர் குற்றவாளி என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு படப்பிடிப்புக்காக திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்கார காட்சிகளை அந்தக் கும்பல் செல்போனில் வீடியோ எடுத்தது.

இதுகுறித்து நடிகை கொச்சி போலீசில் புகார் செய்தார். நெடும்பாசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கில் முக்கிய நபரான பல்சர் சுனில்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், பிரதீப், சலீம், சார்லி தாமஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திலீப்பையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

முதலில் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 216 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முதலில் நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர், பின்னர் பல்டி அடித்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

கடந்த 8 ஆண்டுளாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் திலீப்பிற்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவரது நண்பர் சரத்தையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. மற்ற 6 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !