தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி
நடிகர் மோகன்லாலுக்கு சமீபத்தில் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கப்பட்ட சமயத்தில் நடிகர் மம்முட்டி தனது வாழ்த்துக்களை மோகன்லாலுக்கு தெரிவித்திருந்தார். அதேசமயம் அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க முடியாத சூழல் இருந்தது. அதற்கு முன்னதாக மலையாளத்தில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ரியாட் என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கொச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மோகன்லால், மம்முட்டி, குஞ்சாக்கோ போபன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு வருகை தந்த மோகன்லாலை வரவேற்ற மம்முட்டி அவருக்கு சால்வை அணிவித்து தாதா சாஹேப் பால்கே விருது பெற்றதற்காக தனது வாழ்த்துக்களை நேரில் தெரிவித்துக் கொண்டார்..