உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி

அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மற்ற மொழி திரையுலகிலும் ரீரிலீஸ் டிரெண்ட் உள்ளது. தமிழில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் கடந்த சில வருடங்களில் ரீரிலீஸ் ஆகி வருகின்றன. அப்படி வந்த கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகியோரது ரீரிலீஸ் படங்களுக்கு யாருமே எந்த விதமான வீடியோ பேட்டியும் தரவில்லை. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என சிலர் மட்டுமே அப்படி கொடுத்தார்கள்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா மற்றும் பலர் நடிப்பில் 1999ல் வெளியான 'படையப்பா' படம் இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க படக்குழு உச்சபட்சமாக ரஜினிகாந்தின் வீடியோ பேட்டி ஒன்றை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சுமார் 36 நிமிடம் அந்தப் படம் பற்றி யு டியூப் பேட்டி நேற்று இரவு வெளியானது. படம் வெளியான போது கூட ரஜினிகாந்த் அப்போது டிரென்ட் ஆக இருந்த சாட்டிலைட் சேனல்களில் கூட இப்படம் பற்றி எந்த பேட்டியும் கொடுத்ததில்லை. படம் குறித்த பல தகவல்களை இந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பேட்டி, குறித்து ரஜினிகாந்த், “என் திரை வாழ்வில் படையப்பா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பட நினைவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்,” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு வீடியோ லின்க்கைக் பகிர்ந்துள்ளார்.

தனது முக்கிய படங்கள் பற்றி ரஜினிகாந்த் இப்படி வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டால் பல தகவல்கள் கிடைக்கும் என்பது சினிமா ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !