ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ?
வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் சரியாக இன்னும் ஒரு மாதத்தில் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வியாபாரம் ஒரு சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான 'தி கோட்' படத்தின் தமிழக வியாபாரம் சுமார் 100 கோடிக்கு நடந்ததாகச் சொன்னார்கள். அதைவிட 20 கோடிக்கு கூடுதலாக 120 கோடியில் 'ஜனநாயகன்' படத்திற்கான வியாபாரத்தை முடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்ததாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படத்தை வாங்க உடனடியாக முன்வரவில்லையாம்.
மொத்தமாக ஒருவருக்கே தமிழக வினியோக உரிமையைத் தர முன் வந்து பின்வாங்கினார்கள். அடுத்து ஏரியாவாரியாக தனித்தனியே பிரித்து விலை பேசி சில ஏரியாக்களை விற்றுள்ளார்களாம். ஆனால், முக்கிய ஏரியாவான அதிக தியேட்டர்களைக் கொண்ட சென்னை, செங்கல்பட்டு ஏரியா வியாபாரம் மட்டும் இன்னும் முடிவடையாமல் உள்ளது என்கிறார்கள்.
விஜய் தற்போது அரசியலிலும் இறங்கிவிட்டதால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள், மற்ற கட்சிக்காரர்கள் இந்தப் படத்தைப் பார்க்க முன்வருவார்களா என்ற தயக்கம் வினியோகஸ்தர்கள் மத்தியில் இருப்பதாகத் தெரிகிறது.