பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'ஸ்பைடர்' படத்திலும் நடித்தார். அந்தப் படம் இங்கு தோல்வியடைவே மீண்டும் இந்தப் பக்கம் அவர் வரவில்லை. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் 'வாரணாசி' படத்தில் நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை நிறுவினார் மகேஷ்பாபு. அடுத்து கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலும் 9 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை டிசம்பர் 6ம் தேதி திறக்க உள்ளார். 60 அடி அகலம் கொண்ட திரையுடன் கூடிய தியேட்டர் ஒன்றும் அதில் அமையப் போகிறதாம்.
அனைத்துத் தியேட்டர்களும் 4 கே லேஸர் புரொஜக்ஷன், 4 தியேட்டர்களில் டால்பி அட்மாஸ், 4 தியேட்டர்களில் டால்பி 7.1 தொழில்நுட்ப வசதிகளுடன் அமைய உள்ளது. பெங்களூருவில் ஏற்கெனவே நிறைய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுடன் இந்த மல்டிபிளக்ஸும் இணைகிறது.
மேலும் சில மாநகரங்களில் எஎம்பி சினிமாஸ் தியேட்டர்களைத் திறக்கும் திட்டம் உள்ளதாம்.